சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ. 3 லட்சமும் நிபந்தனைகளுடன் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.