தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னையில் பலர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்த நிலையில், வார இறுதிநாளான இன்றும் நாளையும் என 2 நாட்கள் மற்றும் நாளை மறுநாள் சுகந்திர தினம் என தொடர்ந்து 3 நாள் விடுமுறை தினம் என்பதால், நேற்று கூடுதல் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் சென்றுள்ளனர். இதை பயன்படுத்திக்கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, தினசரி 1950 பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு சார்பில் இயக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துறை தகவல் அளித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 2732 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, மதுரை மற்றும் சேலம் மாவட்டத்திற்கு அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.