பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அல்லது ரோலண்ட்-கார்ரோஸ் போட்டி என்று அழைக்கப்படும் முக்கிய டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கிய இந்தப்போட்டி நாளை மறுநாள் முடிவடைய உள்ளது. பெண்கள், ஆண்கள், பெண்கள்-ஆண்கள் இரட்டையர் பிரிவு மற்றும் கலப்பின இரட்டையர்கள் என 5 பிரிவுகளில் நடந்து வரும் இந்தப்போட்டியின் இறுதி ஆட்டம் நாளை நடைபெற இருக்கிறது. கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் 13 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் பட்டத்தை வென்றவரும், உலக டென்னிஸ் வீரர் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளவருமான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், மூன்றாம் நிலை வீரரான ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வரேவை எதிர்கொண்டார். இதில், முதல் செட்டில் ரபேல் 7-6 என்ற கணக்கில் போராடி ரபேல் வென்றார். 2ஆவது செட் 6-6 என்ற சமநிலையிருந்தபோது அலெக்சாண்டர் ஸ்வரேவ் காயம் காரணமாக விலகினார். இதனால் ரபேல் நடால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம், 30ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு வந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 8ஆவது இடத்தில் உள்ள நார்வே நாட்டைச் சேர்ந்த கேஸ்பர் ரூட், 2014ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாப்பியனும், 20ஆவது வரிசையில் உள்ளவருமான குரோஷியா நாட்டைச் சேர்ந்த சிலிச் உடன் மோதினார். இதில் கேஸ்பர் ரூட் 3-6, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சிலிச்சை வீழ்த்தி இறுதி போட்டியில் முதன்முறையாக முன்னேறியுள்ளார். இதன்மூலம், நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் ரபேல் நடால்-கேஸ்பர் ரூட் மோதவுள்ளனர்.