சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு, ரூ.1,000 முதல்ரூ.4,000 வரையிலான கட்டணத்தில், பல்வேறு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பேறுகால சிகிச்சை பெறும் 100 கர்ப்பிணிகளுக்கு, 11முதல் 14 வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் ஆரம்பநிலை சிசு வளர்ச்சிப் பரிசோதனைகள் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.இங்கு சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, மரபணுப் பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை ரூ.1.50 கோடியில் நிறுவப்பட்டுள்ளன. அனலைசர் கருவியில் உள்ள அதிநவீன மென்பொருள் கட்டமைப்பு மூலம், சிசுவுக்கு மரபணு ரீதியாக ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை துல்லியமாக அறிய முடியும். தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள ரூ.5ஆயிரம் வரை செலவாகும்.
மாநகராட்சி சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றதற்கான சான்றுகளுடன், அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் நேரடியாக வந்து,இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்று ஓமந்தூரார் அரசுபன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.