கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருவதையொட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கரையோர மக்கள் சமுதாய கூடம், சத்துணவு மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 4-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.