நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்திய 20 ஓவர் அணிக்கு பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி அணிக்கு தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களத்தில் இறங்குகிறது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 11-ல் இந்தியாவும், 9-ல் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.