இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் இன்று நடந்து வருகிறது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவானும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்திருந்தனர். இந்நிலையில் சுப்மன் கில் 50 ரன், ஷிகர் தவான் 72 ரன் எடுத்து அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ரிஷப் பண்ட் 15 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ஷ்ரேயாசுடன், சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இதில் சாம்சன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார். ஷ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னில் ஆட்டம் இழந்தார். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 306 ரன்கள் குவித்தது. பின்னர் 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.