புதுடெல்லி: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி (வயது 29), ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் படித்து பி.டெக். பட்டம் பெற்றார். தொடர்ந்து ஐதராபாத்தில் இந்திய வான்படை கல்விக்கழகத்தில் பயிற்சி பெற்றதையடுத்து 2016-ம் ஆண்டு, ஜூன் மாதம் இந்திய விமானப்படை போர் விமானியாகி (சுகோய்-30 எம்.கே.ஐ. விமானி) புதிய சரித்திரம் படைத்தார். இந்திய விமானப்படையில் தற்போது 20 பெண் போர் விமானிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவனி சதுர்வேதிக்கு ஜப்பான் விமானப்படையுடன் இந்திய விமானப்படையும் இணைந்து ‘வீர் கார்டியன்-2023’ என்ற பெயரில் நடத்திய கூட்டு போர் பயிற்சியில் அவனி சதுர்வேதியும் பங்கேற்று அசத்தி இருக்கிறார். இந்த கூட்டு போர் பயிற்சி ஜப்பானின் ஹயாகுரி விமானப்படை தளத்தில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடந்திருக்கிறது. அவனி சதுர்வேதி பங்கேற்றதின் மூலம், வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் போர் விமானி என்ற புதிய சரித்திரத்தையும் படைத்துள்ளார்.