தெற்கு மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் நேற்று தமிழகத்தைச் சோ்ந்த ஏழு மீனவா்கள், காரைக்காலைச் சோ்ந்த மூன்று மீனவா்கள் என மொத்தம் 10 மீனவா்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்., பங்காராம் என்ற கப்பலில் வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் துப்பாக்கியால் சுட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற மீனவா் குண்டடிப்பட்டார். இதனால், தொடை மற்றும் அடி வயிற்றில் கடுமையாக காயமடைந்த வீரவேலுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படையினா் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தின. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில், மீனவர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.