தமிழகம், ஆந்திரா எல்லையில் கடந்த மே மாதம் பெய்த கன மழை காரணமாக, பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டு, பழையசீவரம் பாலாற்று தடுப்பணை நிரம்பியது. கோடைகாலத்தில் பாலாற்றில் தண்ணீர் பார்ப்பதே மிகவும் அரிது. ஆனால், தடுப்பணையே நிரம்பி வழிந்ததால், இந்த பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மற்றும் உள் மாவட்டங்களில் பெய்யும் மழையால் தற்போது பாலாறு மற்றும் செய்யாற்று படுகைகளில் நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை மீண்டும் நிரம்பியது. இதனால், கோடை மழைக்கு இரண்டாவது முறையாக பழையசீவரம் பாலாற்று தடுப்பணை நிரம்பி உள்ளது. தடுப்பணையை தாண்டி 2000 கன அடி நீர் நிரம்பி வருகிறது. விரைவில் தென் மேற்கு பருவ மழையும் பெய்யும் என்பதால், இனி தடுப்பணையில் எப்போதும் கனிசமான அளவிற்கு நீர்த்தேக்கம் இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்