தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் தொடங்கியது. இதையடுத்து சிபிஎஸ்சி மாணவர்களின் தேர்வு முடிவுகளுக்கு பிறகு விண்ணப்பிக்க 5 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2.94 லட்சம் போ் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தை கடந்துள்ளது எனவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர சுமார் 3 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்கிடையே விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 130 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதால் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.