சென்னை: 74-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண-சாரணியர் மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியகொடி ஏற்றினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- பாரத சாரண-சாரணியர் இயக்கத்தில் 10 லட்சம் மாணவர்களை இணைக்கவேண்டும் என்ற இலக்கில் செல்கிறோம். பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில், 22 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது. காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்படும் என கூறியுள்ளார்.