விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ‘வரும் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது;- தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான். பெண்கள் பஸ்சில் ஓசியில் செல்வதாக உயர்கல்வி அமைச்சர் கூறுகிறார். அது மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் கொடுக்கின்றனர். அதனை கொச்சைப்படுத்துகிறார். அது உங்கள் பணம் அல்ல. மக்கள் பணம். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.
முன்னதாக, அவருக்கு மதுரை விமான நிலையத்தில், தொண்டர்கள் மலர்கள் தூவி, மேலதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.