அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.35 மணிக்கு தொடங்கியது. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வரவேற்புரை வழங்கியநிலையில், பொதுக்குழுவுக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுக்குழு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்ற தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். இதை கே.பிமுனுசாமி வழிமொழிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 தீர்மானங்கள் நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழி மொழிந்தார். செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 16 தீர்மானங்களும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமாக அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, பொருளாளராக நத்தம் விஸ்வநாதன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களில் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த தேர்தல் நடத்துவதற்காக நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.