தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதிலும் 470க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளான B.E., B.Tech., படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங்களுக்கும் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் https://tneaonline.org/ என்ற இணையதளத்தில் வரும் ஜூலை மாதம் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் இருக்கும் 110 சிறப்பு உதவி மையங்கள் மூலமாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத்தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ரேண்டம் எண் ஜூலை மாதம் 22ஆம் தேதி வெளியிடப்படும். பின்னர், ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதில், எதும் குறைகள் இருப்பின் அவை ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை புகார் தெரிவிக்கலாம். பின்னர் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைன் முறையிலோ கலந்தாய்வு நடைபெறும்.