தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரவும், உயர்த்தவும் மத்திய அரசு, 28 முறை தமிழக அரசுக்கு வலியுறுத்தியதே மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனினும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி, அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மின்கட்டண உயர்வுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கே.அண்ணாமலை “பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?” என்று அந்தப் பதிவில் அவர் எழுதியுள்ளார்.