சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் ரூ.3.91 கோடி செலவில் இலவச உணவுடன் கூடிய மிகப் பெரிய தங்கும் விடுதி கட்டப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் இந்தியன் ஆயில் நிறுவனம் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) ரூ.25 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தி மற்றும் ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் இருக்கின்ற மகப்பேறு மருத்துவமனைகளில் பெரிய அளவிலான மருத்துவ சேவையை நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வருகிறது. இங்கு 1,265 படுக்கை வசதிகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற வகையில் இன்றைக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மகப்பேறுக்காக வரும் தாய்மார்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதின் விளைவாக 43 சதவீதமாக இருந்த அறுவை சிகிச்சை பிரசவங்கள் 38 சதவீதமாக குறைந்தது.
இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் குழந்தைகளை அனுமதித்துவிட்டு பெற்றோர் மரத்தடியிலும் வேறு இடங்களிலும் படுக்கை வசதிகூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்கள். இதைத் தவிர்க்கும் வகையில், ரூ.3.66 கோடியில் மருத்துவமனை வளாகத்தில் மிகப்பெரிய தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டர் டிச.5-ம் தேதி வெளியாகவுள்ளது.