சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று அதன் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்” என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொண்டர்கள் வெடி வெடித்தும்,இனிப்புகளை வழங்கியும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.