அமலாக்கத்துறை அடுத்த குறியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001- 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார் அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக மனுதாரர்களுடன் இணைக்க கோரி அமலாக்க பிரிவினர் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை 80% முடிவடைந்துள்ளதால் இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமலாக்க துறையின் மனு மீது இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகாத நிலையில் அவரது மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆஜரானார்கள். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் சேது மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மதுரையைச் சேர்ந்த மனோகரன் என்ற வழக்கறிஞரும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி செல்வம் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்துள்ளது. மேற்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, வடக்கில் அமைச்சர் பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கீழ் வந்த நிலையில் தற்போது தெற்கு மண்டலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்டு உள்ளார்.
அமலாக்கத்துறை பதிவு செய்யும் வெளிநாட்டு பணமோசடி பிரிவு வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டால் உடனடியாக ஜாமீன் கிடைக்காது. ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம். தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவை எதிர்கட்களுக்கு எதிராக, குறிப்பாக திமுக அமைச்சர்கள் மீது மத்திய பாஜக அரசு பயன்படுத்திவருவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.