சென்னை: சென்னையில் உள்ள, மெரினா காமராஜர் சாலையில் சேப்பாக்கம் பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நாட்டின் 74-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். குடியரசு தின அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை 3-வது முறையாக நேற்று நடத்தப்பட்டது.
இதன் பிறகு, முப்படையினர், கடலோர காவல் படையினர், காவல், சிறை, வனம், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பும், இடையில் கடலோர காவல் படை,கடற்படை, விமானப்படையின் அலங்காரஊர்திகளும் வலம் வரும். தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்குவார். தொடர்ந்து, அலங்கார வாகன அணிவகுப்புகள் நடைபெறும்,
தமிழக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 21 அலங்கார வாகனங்கள் அணிவகுக்கின்றன. கலை நிகழ்ச்சிகளில் ராஜஸ்தானின் குல்பாலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பாகுரும்பா நடனம், தமிழகத்தின் கரகாட்டம், கைசிலம்பாட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
குடியரசு தின விழாவையொட்டி, காமராஜர் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில் சென்னையில் 6,800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் (ஜன.25, 26) சென்னையில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை பறக்கவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். டிஜிபி சைலேந்திர பாபுவின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்கள் கண்காணிப்பு பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாக சமூகவிரோதிகள் ஊடுருவாமல் தடுக்க, தமிழக கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமையில் தனிப்படை போலீஸார் படகுகளில் ரோந்து சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.