பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையொட்டி ஏராளமான புதுவித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அமைப்பதற்கான ஒரு திட்டத்தையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது. அதன்படி, வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்து செயல்படுத்துவதற்கான ஒரு வரைவை யுஜிசி வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
‘‘இந்தியாவில் தனது வளாகத்தை அமைக்க விரும்பும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனம், சர்வதேச அளவில் முதல் 500 இடங்களுக்குள் இருக்க வேண்டும். ஆண்டறிக்கையை தவறாமல் யுஜிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக முன் அனுமதியின்றி எந்த படிப்பையும் ரத்து செய்வதோ, வளாகத்தை மூடுவதோ கூடாது’’ என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் அடங்கிய வரைவு தொடர்பான கருத்துகள், பரிந்துரைகள் போன்றவற்றை ugcforeigncollaboration@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜனவரி .18-ம் தேதிக்குள் அனுப்பலாம் என்று கூறியுள்ளனர்.