உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கௌதம் புத்தா நகரில் உள்ள பாம்பாவாட்- மஹாவத் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் கேள்விக்கு பதிலளிக்காததால், ஆசிரியர் கோபமடைந்து சிறுவனை தலையிலும் முதுகிலும் அடித்துள்ளார். ஆசிரியரின் அடி தாங்க முடியாமல் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்த சிறுவனை பள்ளியில் இருந்த மற்ற ஆசியர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிறுவன் டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், தலையில் ஏற்பட்ட பலத்த அடி காரணமாக சிறுவனின் நரம்புகள் வெடித்துச் சிதறியதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுவனை கொலை செய்யும் அளவிற்கு தாக்கிய பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகவுள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.