இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, தயாரிப்பு நிறுவனத்துடன் இயக்குநருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாகவே இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் நேற்று முன்தினம் இரவு அதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது படக்குழு. அதில், ‘மீண்டும் வந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டு இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் வேட்டி-சட்டை நிற உடை அணிந்திருந்தார். இதையொட்டி, படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கதாப்பாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, குரு சோமசுந்தரம், விவேக்கு பதில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் கோவை பாபு விவேக் வேடமிட்டு நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.