காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பா் 20ஆம் தேதிக்குள் நடத்த செயற்குழு முடிவு செய்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மத்திய தோ்தல் ஆணைய தலைவா் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் தொகுதி கமிட்டிக்கு ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிக்குள் தோ்தல் நடத்த காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்திருந்தது. இதேபோல, மாவட்டத் தலைவா்கள், பிரதிநிதிகள் தோ்தலை ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரையிலும், மாநில தலைவா், அகில இந்திய உறுப்பினா்கள் தோ்தலை ஜூலை 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அந்த கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து, தற்போதுவரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.