கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுள்ள தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சூலூர் சுல்தான்பேட்டையில் பேசினார். அப்போது, இந்தியாவில் சூப்பர் முதலமைச்சர் தான்தான் என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், லஞ்சம் வாங்குவதில் தான் அவர் சூப்பராக இருக்கிறார், இந்த ஆட்சியில் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றைத் துல்லியமாக திமுக செய்து வருகிறது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் திமுக அரசு ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறது. அரசு திட்டங்கள் முதல், கொள்கைசார் முடிவுகள், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள், மின் கட்டண உயர்வு, வரும் காலத்தில் உயர்த்தப்படவுள்ள பேருந்து கட்டணம் என நாட்டு மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அரசாக திமுக அரசு உள்ளது என அவர் கடுமையாக சாடி பேசியுள்ளார்.