கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையிலான 2021-2022ஆம் நிதியாண்டிற்கான சொத்து மதிப்பை பிரதமர் மோடி அண்மையில் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மோடியின் சொத்து மதிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடிக்கு சொந்தமான ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.2,23,82,504-ஆக உள்ளது. அதில் ரூ.35,250 கையிருப்பாகவும், ரூ.9,05,105 தபால் அலுவலக கணக்குகளில் சேமிப்பாகவும், ரூ.1,89,305 ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் சேமிப்பாகவும் உள்ளது. இதற்கிடையில், குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள தனக்குச் சொந்தமாக இருந்த ரூ.1.1 கோடி மதிப்பிலான நிலத்தை பிரதமர் மோடி தானமாக கொடுத்துள்ளார். முன்னதாக 2020-2021ஆம் நிதியாண்டில் ரூ.1,97,68,885 கோடியாக இருந்த பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இந்த நிதியாண்டில் ரூ.26 லட்சம் அதிகரித்து ரூ.2.23 கோடியாக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த நிதியாண்டில் அவர் புதிதாக அசையா சொத்துக்கள் எதுவும் வாங்கவில்லை. அரசு நிதிப் பத்திரங்கள், நிறுவனப் பங்குகள், பரஸ்பர நிதி உள்ளிட்ட எவற்றிலும் பிரதமா் மோடி முதலீடுகளை மேற்கொள்ளவில்லை. அவருக்குச் சொந்தமாக எந்தவொரு வாகனமும் இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக இணையதளத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதாப் உள்ளிட்ட அமைச்சர்கள் உட்பட அனைவரின் சொத்து மதிப்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.