புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில அவைத் தலைவருமான எஸ்.பி. சிவக்குமார்-சித்ரா சிவக்குமார் ஆகியோரின் மகன் ஆனந்தராஜிற்கும், திருப்பத்தூர் சாமிசெட்டி-சித்ராசாமிசெட்டி ஆகியோரின் மகள் மீனாட்சிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் புதுவை-திண்டிவனம் சாலை பட்டானூர் அருகே உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது. திருமணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி தாலி எடுத்து கொடுத்தார். மணமகன் ஆனந்தராஜ் மனமகள் மீனாட்சி கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து மணமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின்-துர்கா ஸ்டாலின் ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தலைவர் கலைஞரை கல்லூரிக்கு சிறப்பு பேச்சாளராக பேச வைக்க எஸ்பி.சிவக்குமார் அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, நீண்டநேரம் பேச வேண்டும் என சிவக்குமார் கட்டளையிட்டார். இதற்கு கலைஞர் பேசும்போது, இளம்கன்று பயமறியாது. சிவக்குமார் போன்ற இளைஞர்கள் கட்டளையிட, அதை நிறைவேற்ற நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் என பேசினார். எஸ்.பி.சிவக்குமார் துணிச்சல் மிக்கவர். 40 ஆண்டு கட்சிப்பணியை நிறைவு செய்தபோது, கலைஞர், பேராசிரியர், புதுவை மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என பாராட்டியிருந்தேன்.
புதுவை அமைச்சராக அவர் ஆற்றிய பணியை மறக்க முடியாது. புதுவையை தமிழகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாது. அதனால்தான் புதுவையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறுகிறோம். புதுவையில் ஏற்கனவே ராமச்சந்திரன், ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வின் ஆட்சி நடந்துள்ளது. நிச்சயமாக மீண்டும் புதுவையில் திராவிட மாடல் ஆட்சி உதயமாகும். அதில் யாரும் சந்தேகப்பட வேண்டாம். வைத்திலிங்கம் காங்கிரஸ் முதலமைச்சராக கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? நாராயணசாமி நம்மோடு இணைந்து கூட்டணி ஆட்சி நடக்கவில்லையா? எந்த ஆட்சி நடந்தாலும் புதுவையில் மதவாத ஆட்சி உருவாகிவிடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதுவையில் விரைவில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளீர்கள்.
சட்டமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பணியினை தொடங்குங்கள் என கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சமயத்தில் யாரோடு கூட்டணி என்பதை முடிவு செய்வோம். வெற்றிக்கு அச்சாரமாக நாம் தற்போதே பணியாற்ற தொடங்க வேண்டும்.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் எந்த சூழலிலும் உங்களோடு ஒருவனாக இணைந்து நின்று பணியாற்ற காத்திருக்கிறேன். புரட்சிக்கவிஞர் கூறியபடி, வீட்டுக்கு விளக்காய், நாட்டுக்கு தொண்டர்களாய் வாழுங்கள் என வாழ்த்துகிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர் சூட்டுங்கள் என மணமக்களை கேட்டுக்கொள்கிறேன். திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஆர்.கே. பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மு.க.தமிழரசன், புதுவை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, நாகதியாகராஜன், சம்பத், செந்தில்குமார் மற்றும் தமிழக மாநகராட்சி, நகராட்சி மேயர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.