புதுடெல்லி : சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை நடத்துவதாக கூறி, அது தொடர்பான புள்ளி விவரங்களையும் பட்டியலிட்டனர்.
இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலனை செய்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதி அளித்தனர். பாதிக்கப்பட்ட தனிநபர்கள் யாராக இருந்தாலும், சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். ஆனால் தனிப்பட்ட வழக்குகளின் உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொதுவான வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்ததோடு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.