தேசிய தலைநகர் வெள்ள நீரில் தத்தளிப்பது குறித்து டெல்லி ஆம் ஆத்மி மற்றும் ஹரியாணா பாஜக அரசுகள் மாறிமாறி குற்றம் சுமத்தும் நிலையில் டெல்லியின் சில பகுதிகளில் சாலைகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை வரலாறு காணாத அளவுக்கு யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளைக் கடந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. டெல்லியின் வெள்ள கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெள்ள கட்டுப்பாட்டகம் சேதமடைந்துள்ளதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து சேதமடைந்த பகுதி வழியாக வெள்ள நீர் நகருக்குள் புகுந்து நகரின் மையப் பகுதியான திலக் மார்க் பகுதியில் அமைந்துள்ள உச்சநீதிமன்றம் வரை நுழைந்தது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் நிலைமையை சீர் செய்ய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாடினார்.
வியாழக்கிழமை இரவு நகருக்குள் புகுந்த யமுனை நீர் வெள்ளிக்கிழமை இரவு வடியத்தொடங்கியது. இருந்தாலும் டெல்லியின் ஐடிஓ பகுதிகள் சனிக்கிழமையும் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. இந்தநிலையில் தொடர்ந்து 20 மணிநேரம் இடைவிடாமல் போராடி பணி செய்து ஐடிஓ பகுதி தடுப்பணையை சீர்செய்த ராணுவ பொறியாளர் பிரிவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சுமார் 20 மணிநேரம் இடைவிடாத கடின உழைப்புக்கு பின்னர், ஐஓடி தடுப்பணையில் சிக்கியிருந்த முதல் கதவு திறக்கப்பட்டது. நீர்மூழ்கி வீரர்கள் குழு கம்ப்ரஸரின் உதவியுடன் வண்டல் மண்களை வெளியேற்றினர். அதன் பின்னர் ஹைட்ராலி க்ரெயின் மூலம் கதவு மேலே இழுக்கப்பட்டது. விரைவில் ஐந்து கதவுகளும் திறக்கப்படும். ராணுவ பொறியியல் பிரிவுக்கும் நீர்மூழ்கி வீரர்களுக்கும் சிறப்பு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.