எரிவாயு சிலிண்டருக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மட்டும் இரண்டு முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், இன்று சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கான டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. அதன்படி, புதிதாக 14.2 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கான டெபாசிட் கட்டணம் ரூ.1,450லிருந்து ரூ.2,200 ஆகவும், 2 இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.2,900த்திலிருந்து ரூ.4,600ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல, ரெகுலேட்டர்கள் கட்டணமும் உயர்ந்துள்ளது. இத்துடன், 5 கிலோ எடை கொண்ட சிறிய சிலிண்டருக்கான வைப்புத் தொகையும் ரூ.800லிருந்து ரூ.1,150ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன. 2012ஆம் ஆண்டு சிலிண்டர் இணைப்பை பெறுவதற்கு டெபாசிட் முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.