திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலை ஆட்டோ ஓட்டுவதற்கு சென்று விட்டபோது மர்மமான முறையில் அவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிவதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனம் பழுது நீக்கம் செய்ய சென்னை சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தீயணைப்பு துறையினர் வருவதற்கு தாமதமானதால் அங்கிருந்த பொதுமக்கள் பற்றி எரியும் குடிசை வீட்டின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தனுஷ் என்ற வாலிபர் உடம்பில் தீ பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தனுஷ் திருத்தணி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்து சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.