தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆருத்ரா தங்கநகை நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ரூ.1 பணம் செலுத்தினால் மாதம் ரூ.32 ஆயிரம் வட்டி தரப்படும் என்று வாடிக்கையாளர்களின் ஆசையை தூண்டும் வகையிலான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதன் மூலம் பல்வேறு பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தி ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழகம் முழுவதும் ஆருத்ரா தங்கநகை நிதி நிறுவனம் தொடர்பான 26 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தசோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு 11 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் உட்பட 8 பேர் மீது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை ஆருத்ரா தங்கநகை நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான ஜேம்ஸ் பாஸ்கர், மோகன்பாபு பத்மநாபன் ஆகிய இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இயக்குநர்கள் உட்பட 6 பேரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் தேடுதல் வேட்டையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 7 டி.எஸ்.பி-க்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.