தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்து வருகிறது. விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக பிடிப்பட்டால், ரூ. 1,000 அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ. 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், அடுத்த வாரம் முதல், ‘மெட்டல் டிடெக்டர்’ உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.