புதுக்கோட்டை : அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், வழக்குப்பதிவு செய்து 90 நாட்கள் ஆகியும் இதுவரை ஒருவரைக்கூட போலீசார் கைது செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி.., போலீஸ் தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருவதாகவும், உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது. ஒருநபர் ஆணையம் இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.