சென்னை : தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., பா.ஜ.க.வும் தங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவு செய்தது.
இதற்கிடையே 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடக்கிறது.