இந்தியாவில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவுற உள்ளது. இதனையடுத்து, இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் முதலே தேர்தல் தொடர்பான வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்தார். அதற்காக தொடர்ந்து மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சிவார்த்தைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு நேற்று லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இன்று அதற்கான முடிவுகள் வெளிவந்தது. அதில், சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். சோனியாவுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.