பஞ்சாப் மாநிலம் மான்சா என்னும் இடத்தில் வேதாந்த குழும நிறுவனங்களில் ஒன்றான TSPL அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்திற்கு ஆலைகளை அமைக்கும் ஒப்பந்த பணிகளை செப்கோ (SepCo) என்ற சீன நிறுவனத்தில் பணி புரிவதற்காக 2011ஆம் ஆண்டு 263 சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ப்ராஜெக்ட் விசாவில் இந்தியா வந்துள்ளனர். இவர்களின் பணிகள் நிறைவு பெறாததால் தொடர்ந்து ப்ராஜெக்ட் விசாவை நீட்டிப்பு செய்ய முயன்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது 2010ஆம் ஆண்டு, மின் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி தொழில் மேற்கொள்ள வரும் வெளிநாட்டினருக்காக ப்ராஜெக்ட் விசா அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான புதிய விதிகள் வகுக்கப்பட்டது. இதனை பயன்படுத்திக்கொண்டு செப்கோ நிறுவன சீன பணியாளர்களின் ப்ராஜெக்ட் விசாவை விதிமுறைகளை மீறி நீட்டிப்பு செய்ய ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், அவரின் ஆடிட்டர் பாஸ்கரராமன் மூலம் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாக சி.பி.ஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். முன்னர், இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, பின்னர் ஆடிட்டர் பாஸ்கரராமனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று சிபிஐ விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். இதற்கிடையில், கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படலாம் என்று எண்ணியதால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இக்பால், கார்த்தி சிதம்பரத்தை வரும் 30ஆம் தேதி வரை கைது செய்யத்தடை விதித்ததோடு, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு கடந்த 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை இன்றைய தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்தநிலையில் இன்று (03) விசாரணைக்கு வந்த கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு மீதான விவாதங்கள் ஏற்கனவே முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில், கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தவிட்டுள்ளனர். இந்த உத்தரவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.