சென்னை : பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி தகுதிநீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் எழும்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.