கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யும் நடிகருமான விஜய் வசந்தகுமார் சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கடந்த மே மாதம் 30ஆம் தேதி எம்.பி விஜய் வசந்தகுமார் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நிலையில், அங்கு அவரது ரூ.1.50 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த பேனா காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பேனா விஜய் வசந்தகுமாரின் தந்தையும், முன்னாள் எம்.பி.,யுமான வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்பதால் விஜய் வசந்தகுமார் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாகவும், எனவே காணாமல் போன பேனாவை விரைவில் கண்டுபிடித்து தருமாறும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் கிண்டி போலீசார் தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.