சூரத்: காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி மீது, சூரத்தின் பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் எப்படி மோடி என்பது பொதுவான குடும்பப்பெயராக இருக்கிறது?” என்று பேசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.நான்காண்டுகள் பழமையான இந்த அவதூறு வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கடந்த வாரத்தில் கேட்டு முடித்திருந்த தலைமை நீதித்துறை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, தீர்ப்பை இன்று (மார்ச் 23 ஆம் தேதிக்கு) ஒத்திவைத்திருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. அதற்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
தீர்ப்புக்கு பின்னர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது மதம், அகிம்சையே அதனை அடைவதற்கான பாதை” என்று பதிவிட்டுள்ளார்.