பிரபல டோலிவுட் இயக்குநர் வேணு உடுகுலா இயக்கி நடிகை சாய்பல்லவி, பாகுபலி படப்புகழ் ராணா டகுபதி இணைந்து நடித்திருக்கும் தெலுங்கு திரைப்படம் ’விரத பர்வம்’ இன்று வெளியாகி இருக்கிறது. முன்னதாக இந்த திரைப்படத்துக்கான நேர்க்காணல் ஒன்றில், நடிகை சாய் பல்லவி “இடதுசாரி, வலதுசாரி இவற்றில் எது சரி, எது தவறு என்று கூற முடியாது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டதாக காண்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற நபரை அடையாளம் தெரியாத கூட்டத்தினர் முஸ்லிம் என்று சந்தேகித்து அடித்துக்கொன்றது. இதற்கும் காஷ்மீர் சம்பவத்துக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரண்டும் வன்முறைதான்”. என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சாய் பல்லவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பரவத் தொடங்கிய நிலையில், விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்த நபர் ஒருவர் ஐத்ரபாத் காவல் நிலையத்தில் சாய் பல்லவி மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், பசு காவலர்களையும், காஷ்மீர் திவிரவாதிகளையும் சாய் பல்லவி ஒப்பிட்டு பேசியுள்ளார். எனவே இது தொடர்பாக சாய் பல்லவி மற்றும் விரத பர்வம் திரைப்பட இயக்குநர் வேணு உடுகுலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.