சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களைஅகற்ற வேண்டும் என்ற மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘மேன்டூஸ்’ புயல் சென்னை அருகே 9-ம் தேதி இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கத்தால் 8-ம் தேதி முதல்10-ம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு கூறியிருப்பதாவது: 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். அதற்குரிய முறையில் சுழற்சி முறையில் பணியாளர்களுக்கான வேலை நேரம் பட்டியலிடப்பட வேண்டும்.மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றவும், புயல் எச்சரிக்கை காரணமாக விதிகளை மீறி சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.