தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால் பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வு இன்று காலை ஆன்லைனில் தொடங்கியது. வரும் 13ஆம் தேதி வரை நடக்க இருக்கும் முதல் சுற்று கலந்தாய்வில் கட் –ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதில், 332 அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வில், மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்த ஒரு வாரத்திற்குள் கல்விக் கட்டணத்தை கல்லூரிகளில் செலுத்திவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேராவிட்டால் அந்த இடங்கள் காலியாக கருத்தப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.