கோவை, கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அவரது மனைவி மகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்டு கோவை சரக டிஐஜி விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை சரக டி.ஐ.ஜி-யாக கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார். குரூப் 1 தேர்வு எழுதி டிஎஸ்பியாக பதவி ஏற்றபின் இரு ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎஸ் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர், முதன்முதலாக வள்ளியூரில் ஏஎஸ்பியாக பதவி ஏற்றார். சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிசிஐடி எஸ் பி ஆக அப்பொழுது பணியாற்றி விசாரணை நடத்தினார்.
தற்கொலை செய்த டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-2 முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் டி ஐ ஜி தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையினால போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.