சென்னை: தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வர் பேசியதாவது:- காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர் கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36-வது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு. இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன்.
தமிழகத்தில் அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறை கிணறு, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை எனத் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப 47 வகையான நீர் நிலைகள் இருந்த வளமான அறிவுச் சமூகம்தான் தொன்மையான தமிழ்ச் சமூகம். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு, காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், தகவமைத்துக்கொள்ளவும், விரைகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுகாடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கிவைத்தேன். இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு, கார்பனை உள்வாங்கவும் பயன்படும். ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலையை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டுமெனில், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கார்பன் சமநிலையை அடையவேண்டும்.
மேலும், கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தைப் பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13-ஆக உயர்த்தியுள்ளோம். இதைத் தவிர, பெருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க சரணாலயங்களை ஏற்படுத்தி உள்ளோம். மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்கான குறியீடாக “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தாத, ஏன், ஒன்றிய அரசுகூட உருவாக்காத “காலநிலை மாற்ற நிர்வாகக் குழு” எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுதான் தமிழ்நாடு எப்போது கார்பன் சமநிலையை அடையவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போகிறது.
இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல் பூர்வமாக வெளியிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.