1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தாலும், சீன அரசின் கட்டுப்பாட்டிலேயே தைவான் செயல்பட்டு வருகிறது. எனினும், அமெரிக்கா தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற உறவின் மூலம் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்த நாட்டைச் சேர்ந்த தலைவா் சென்றாலும் அதற்கு சீனா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி கடந்த வாரம் தைவான் தீவின் தலைநகர் தைபேவுக்கு சென்றார். நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்தே, அமெரிக்காவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதன்படி, அவரது வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தைவான் எல்லையையொட்டி பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தின. முன்னதாக தைவானை, சீனாவுடன் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா். இந்த நிலையில், தைவானை அமைதியான வழிமுறையிலேயே சீனாவுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதற்காக, அமைதி வழி மட்டுமே பின்பற்றுவோம் என்றோ, ராணுவ பலம் பயன்படுத்தப்படாது என்றோ உறுதியளிக்க மாட்டோம். தேவைப்பட்டால் தைவான் மீது போா்த் தொடுக்கவும் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் குறிப்பிட்டு நேற்று அறிக்கையில் வெளியிட்டுள்ளது.