உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் 1ஆம் தேதி கொரோனா ஊரடங்கை திரும்பப்பெற்றுக்கொண்டது. இதனைத்தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள பொதுஇடங்களுக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதற்குள் பீஜிங்கில் உள்ள பொழுதுப்போக்கு பூங்காவில் இருந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஊழியர்கள் 3 பேரும் அங்குள்ள பார் ஒன்றுக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவத்தொடங்கியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில், 11ஆம் தேதி சீனாவின் முக்கிய நகரங்களைக் கொண்ட மெயின்லேண்ட் பகுதிகளில் புதிதாக 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உலக கொரோனா நோய் தொற்று விகிதத்துடன் ஒப்பிடுகையில் சீனாவில் தற்போது உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பூஜ்ஜிய கொரோனா நோய் எண்ணிக்கையை கடைபிடிக்க அந்த நாடு உறுதியாக உள்ளது. எனவே அந்த நாடு முழுவதும் மெகா கொரோனா நோய் தொற்று பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை 25 மில்லியன் மக்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி, இந்த வார இறுதியில் ஷாங்காய் நகரில் உள்ள பெரும்பான்மை குடியிருப்பாளர்களை கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் மற்ற இடங்களில் சோதனைக் காலத்தில் குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு முறையேனும் பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிகாக அந்த நாட்டில் முக்கிய நகரங்களில் 33 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரம் மாதம் 22ஆம் தேதி முதல் நேற்று வரை 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.