சென்னை : சென்னை பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா, சில தினங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி பலியானான். இதையடுத்து இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் புதிய விதிகளை பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரங்கள்:- 8 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகள் நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். *8 வயதில் இருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்பிலேயே அனுமதிக்கப்படவேண்டும். *பயிற்சி பெறுபவர்கள் வலிப்பு நோய், இருதய மற்றும் சுவாசக்கோளாறு, தோல் நோய்கள், பாலுறவு நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்கள் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், *பயிற்சியாளர்கள் மற்றும் உயிர் காக்கும் 2 வீரர்கள் முன்னிலையில் ஒரு மணி நேரத்துக்கு 15 முதல் 20 குழந்தைகள் மட்டுமே நீச்சல் குளத்தில் அனுமதிக்கப்படவேண்டும். *பராமரிப்பு பணிக்காக அல்லது வேறு ஏதாவது காரணங்களால் நீச்சல் குளம் மூடப்பட்டால் மாநகராட்சியிடம் கண்டிப்பாக தகவல் தெரிவிக்கவேண்டும். *நீச்சல் குளத்தில் பயிற்சி பெறுவதற்கு எழுத்துப்பூர்வமான இசைவினை பெற்றோரிடம் இருந்து பெறவேண்டும். *அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.