சென்னை, தங்க சாலையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 1300 எம்.எல்.டி குடிநீர் இருந்தால் மட்டுமே சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் இருந்து குடிநீர் கொண்டுவருவதில் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அது முடிந்தால் 260 எம்.எல்.டி குடிநீர் கூடுதலாக சென்னைக்கு கொண்டு வரமுடியும். கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக, குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஏற்கனவே 548 இடங்களிலே 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நெம்மேலி பகுதியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இரண்டு மாதங்களில் முதலமைச்சர் திறந்து வைப்பார். அதன் மூலம் 160 எம்.எல்.டி கூடுதல் குடிநீர் சென்னைக்கு கிடைக்கும். இந்த ஆண்டு மட்டும் முப்பதாயிரம் கோடி செலவில் குடிநீர் வழங்கும் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். தமிழக அரசின் சார்பில் இயற்கையாகவே தண்ணீரை தேக்கி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.