சென்னை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரின் முன்னும் பின்னும் காவல்துறையினரின் மோட்டாா் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டு கோட்டை கொத்தளத்தின் முன்புள்ள அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே இறக்கப்பட்டு அங்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்றதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத்தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டா் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை போலீஸ் கமிஷனா் சங்கா் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளா் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை முதலமைச்சர் பாா்வையிட்டார். பின்னர், 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.